“மன் கி பாத் அல்ல, ஜன கி பாத் கேளுங்கள்” – மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
சென்னை, 07 ஜூன் (ஹி.ச.) காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை கடுமையாக விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நடைபெறும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு உர
மாணிக்கம் தாகூர்


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை கடுமையாக விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நடைபெறும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு உரையாற்ற உள்ள நிலையில்,

தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,

மக்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான். வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை ஏன் மீண்டும் ரூ.30 உயர்த்தினீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.928.50-இல் இருந்து ரூ.957.50 ஆக உயர்ந்திருப்பதையும், சமீபத்தில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார சுமை ஆகியவற்றால் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை நேரடியாக பாதிப்பதாக அவர் தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது “அச்சே தின்” என வாக்குறுதி அளித்த பாஜக அரசு, தற்போது ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர செலவையும் அதிகரித்து வருவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

மேலும், மக்களின் வரிப்பணமும் விலைவாசி உயர்வின் சுமையும் சாதாரண குடும்பங்களின் மீது சுமத்தப்படுவதாகவும், அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.

“மன் கி பாத் பேசுவதற்கு முன் மக்களின் பாதையைப் பாருங்கள். காலியான சமையலறைகளையும், விலைவாசி உயர்வால் தவிக்கும் குடும்பங்களையும் பாருங்கள்.

மன் கி பாத் அல்ல, ஜன கி பாத் கேளுங்கள்” என்று பதிவிட்ட மாணிக்கம் தாகூர், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam