கடுவை ஆற்றில் பெயரளவில் நடக்கும் தூர்வாரும் பணி - விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினம், 07 ஜூன் (ஹி.ச.) நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுவை ஆற்றில் தூர்வாரும் பணிகள் பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாக விவசாயிகள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆற்றின் பெரும்பகுதியில் ஆகா
கடுவை ஆற்றில் பெயரளவில் நடக்கும் தூர்வாரும் பணி -  விவசாயிகள் வேதனை


நாகப்பட்டினம், 07 ஜூன் (ஹி.ச.)

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுவை ஆற்றில் தூர்வாரும் பணிகள் பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாக விவசாயிகள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆற்றின் பெரும்பகுதியில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நீரோட்டம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது.

கரைகள் சேதமடைந்தும், ஆக்கிரமிப்புகள் பெருகியும் காணப்படும் நிலையில், முறையான தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என வேளாண் பெருமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் கடுவை ஆற்றின் தற்போதைய நிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றடையாது என்பதால் பாசனத்திற்கு எந்தப் பயனும் இருக்காது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடி தொடங்கும் முக்கியமான தருணத்தில் ஆற்றை முழுமையாகத் தூர்வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்றி, நீர்வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b