Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 07 ஜூன் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தலையாட்டுமந்து கிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சி(வயது 75) என்பவரின் வீட்டிற்குள் நேற்று இரவு நாயை வேட்டையாடும் நோக்கத்துடன் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.
வீட்டின் அருகே நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டி விசாலாட்சி, வளர்ப்பு நாயைத் தாக்க முயன்ற சிறுத்தையை விரட்ட முற்பட்டுள்ளார். அப்போது ஆவேசமடைந்த சிறுத்தை மூதாட்டியை கடுமையாகத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் விசாலாட்சியின் தலை, கை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும், சிறுத்தை அங்கிருந்து தப்பி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது.
உடனடியாக மூதாட்சியை மீட்ட பொதுமக்கள், உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே தலையாட்டுமந்து மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய்களை சிறுத்தை தாக்கி கொன்று வருவதால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே நடமாடவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மூதாட்டி மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தை விளைவிக்கும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்துப் பிடித்து, மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b