விஜயை கடுமையாக விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் - நாங்கள் தோற்றுள்ளோம் செத்துப் போகவில்லை என காட்டம்
மதுரை, 07 ஜூன் (ஹி.ச.) மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பின்னர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசி
ஆர்பி


மதுரை, 07 ஜூன் (ஹி.ச.)

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பின்னர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர்,

அதிமுகவில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகிச் சென்றவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

கடந்த காலங்களில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விலகிய பல தலைவர்கள் மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்த வரலாறு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிலர் அதிமுகவை பார்த்து சிரிக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் தேர்தலில் தோற்றுள்ளோம் தவிர, அரசியலில் இருந்து அழிந்து போகவில்லை. பல்வேறு சோதனைகளையும் கடந்து வந்த இயக்கம் அதிமுக. கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவுடன் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய அவர்,

அதிகாரத்தில் இருப்பதால் பலர் அவரை நோக்கி செல்கின்றனர். ஆனால் அரசியல் என்பது நிரந்தரமல்ல. வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானவை என்று கூறினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகளுக்கும் ஆர்.பி. உதயகுமார் பதிலளித்தார்.

அதிமுகவினரில் 50 சதவீதம் பேர் தவெகவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், அதிமுகவினர் தவெகவுக்கு வாக்களித்ததால் மட்டுமே அந்தக் கட்சி வளர்ச்சி பெற்றதாக கூறுவது ஏற்க முடியாதது என்றும் தெரிவித்தார்.

மேலும், விஜயின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்த அவர்,

வரலாறு, அனுபவம், போராட்ட அரசியல் ஆகியவை முக்கியம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P