செயற்கை நுண்ணறிவால் தலைவர்களின் கண்ணியத்தை சிதைப்பது கண்டிக்கத்தக்கது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை, 07 ஜூன் (ஹி.ச) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதியின் உருவத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பதிவுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Cpi


சென்னை, 07 ஜூன் (ஹி.ச)

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதியின் உருவத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பதிவுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் முக்கிய அரசியல் தலைவராகவும், சமூகநீதிக் கொள்கைகளை முன்னெடுத்த தலைவராகவும் திகழ்ந்த கருணாநிதியின் கண்ணியத்தை சிதைக்கும் வகையிலான AI உருவாக்கப்பட்ட பதிவுகள் அநாகரிகமானவை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பதிவுகளுக்கு எதிர்வினையாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை இழிவுபடுத்தும் வகையிலான படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிவியல் வளர்ச்சியின் முக்கிய உச்சமாக இருந்தாலும், அதை பிறரை அவமதிக்கவும் கண்ணியத்தை குலைக்கவும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கூறியுள்ள அவர், இதுபோன்ற செயல்களை சமூகம் ஒட்டுமொத்தமாக கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் தரம்தாழ்ந்த செயல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ