Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 07 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவில் உள்ள பழமையான இந்து கோவில்கள் ஆன்மிக மையங்களாக மட்டுமின்றி, பெரும் பொருளாதார வளங்களையும் கொண்டுள்ளன.
பக்தர்கள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் காணிக்கைகள், நன்கொடைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் மூலம் இக்கோவில்கள் மிகப்பெரிய சொத்துக்களை குவித்துள்ளன.
நாட்டின் மிகச் செல்வந்த கோவிலாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் முதலிடத்தில் உள்ளது.
இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோவிலுக்கு உண்டியல் காணிக்கைகள், தங்க நன்கொடைகள் மற்றும் பிற வழிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்த பட்டியலில் 2-வது இடத்தில் கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. 2011-ம் ஆண்டு கோவிலின் நிலவறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வைரம் மற்றும் பழமையான நாணயங்களின் மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டது.
3-வது இடத்தில் மகாராஷ்டிராவின் ஷிர்டி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நன்கொடைகள் கிடைக்கின்றன.
2022-ம் ஆண்டில் மட்டும் ரூ.400 கோடிக்கும் மேற்பட்ட நன்கொடைகள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4-வது இடத்தில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் பணம், தங்கம் மற்றும் வெள்ளி காணிக்கைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2024-25 நிதியாண்டில் நன்கொடைகள் ரூ.171.90 கோடியாக உயர்ந்துள்ளன.
5-வது இடத்தில் கேரளாவின் குருவாயூர் கோவில் உள்ளது. ரூ.1,737 கோடி வங்கி வைப்புத் தொகைகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் பெருமளவு தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவற்றை இந்த கோவில் கொண்டுள்ளது.
இந்த கோவில்களின் வருமானம் கோவில் நிர்வாகத்திற்காக மட்டுமல்லாமல், கல்வி, மருத்துவம், அன்னதானம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஆன்மிக சேவையுடன் சமூக முன்னேற்றத்திலும் இந்த கோவில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA