திருப்பரங்குன்றம் விவகாரம் - தமிழக அரசின் நிலைப்பாட்டை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பதாக ஜவாஹிருல்லா பதிவு
சென்னை, 07 ஜூன் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்
Jawahirulla


Bb


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையே தொடரும் என்றும், இந்த விவகாரத்தில் மதவாத மற்றும் வெறுப்பியல் சக்திகள் அரசியல் செய்ய தமிழக அரசு அனுமதிக்காது என்றும் தமிழக அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்பு என அவர் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம், பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்வதாகவும், அங்கு தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் மத உணர்வு தூண்டல்களை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடுவது சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான செயல் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக அரசு எடுத்த அதே சமநிலையான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடர்ந்து கடைப்பிடிப்பது, தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை மரபையும் சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சமூக அமைதி முதன்மை” என்ற அணுகுமுறையே தமிழ்நாட்டை பிற மாநிலங்களிலிருந்து தனித்துவப்படுத்தி வருவதாகவும், மத அடிப்படையிலான மோதல்களை தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயலும் சக்திகளுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து சரியான பதிலளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் பண்பாடும் மக்கள் மனநிலையும் வெறுப்பை அல்ல, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையே ஆதரிப்பவையாக உள்ளதாகக் கூறியுள்ள அவர், சமூக அமைதியையும் அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்கும் தமிழக அரசின் அணுகுமுறையை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் எந்த முயற்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ