மம்தா பானர்ஜிக்கு அடுத்த அதிர்ச்சி - டிஎம்சிக்கு குட்பை சொன்ன சிறுபான்மை பிரிவு செயலாளர்
கொல்கத்தா , 07 ஜூன் (ஹி.ச.) மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக இருந்த முகமது அஜ்மல் சித்திக்கி, தனது அனைத்து கட்சி பதவிகளிலிரு
K


கொல்கத்தா , 07 ஜூன் (ஹி.ச.)

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக இருந்த முகமது அஜ்மல் சித்திக்கி, தனது அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் ஹஜ் பயணத்தை முடித்து நாடு திரும்பிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

கட்சிக்குள் ஜனநாயக நடைமுறைகள் குறைந்து விட்டதாகவும், நீண்ட காலமாக உழைத்து வரும் உண்மையான தொண்டர்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். நீண்ட யோசனைக்குப் பிறகே

இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜினாமாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அஜ்மல் சித்திக்கி, டிஎம்சி தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கட்சி தற்போது பலவீனமடைந்து வருவதற்கு முக்கிய காரணம் அபிஷேக் பானர்ஜிதான். அவரது அதிகார குவிப்பு மற்றும் சர்வாதிகார போக்கால் நேர்மையான தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களின் கருத்துகளுக்கு கட்சியில் மதிப்பு இல்லை என்று அவர் கூறினார்.

மேலும், சில பழைய வழக்குகள் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக கட்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ராஜினாமா செய்த பிறகு தற்போது மனநிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு டிஎம்சி கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறுபான்மையினர் பிரிவின் முக்கிய நிர்வாகி ஒருவரின் ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA