Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் சுமார் 4,000 சில்லறை மதுபான கடைகள் வாயிலாக பீர் மற்றும் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த கடைகள் மூலம் மாதந்தோறும் 88 லட்சம் முதல் 90 லட்சம் மது பெட்டிகள் வரை விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மதுபானப் பெட்டிக்கும் ₹40 முதல் ₹90 வரையிலும், ஒயின் பெட்டிகளுக்கு ₹20 வரையிலும் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த வகையில் மாதந்தோறும் சுமார் ₹100 கோடி வரை வசூலாகி வந்த நிலையில், அந்த தொகை அரசு கஜானாவிற்கு செல்லாமல் கணக்கில் வராமல் வேறு வழிகளில் வெளியே செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்த புகார்களை அடுத்து தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கணக்கில் வராமல் வெளியே சென்று வந்த அந்த தொகையை முறையாக அரசின் வருவாயாக மாற்றும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய விதித் திருத்தத்தின்படி, இனி மது தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்படும் அந்த தொகை முழுமையாக அரசு கஜானாவிற்கு நேரடியாக சென்று சேரும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹1,800 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த விதிமாற்றத்தால் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான வகைகளின் சில்லறை விற்பனை விலையிலோ அல்லது தரத்திலோ எவ்வித மாற்றமும் இருக்காது என்று அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் வராமல் இருந்த வருவாயை முறைப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b