Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)
கோவை கணபதி பகுதியில் புதிய தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
47 ஆண்டுகளாக கோவையில் வாழ்ந்து வருகிறேன். கோவைக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறைகளின் வளர்ச்சிக்காக அரசு தொடர்ந்து பணியாற்றும்” என்றார்.
மேலும், “கோவையை மேம்படுத்தும் திட்டங்கள் தினந்தோறும் செயல்படுத்தப்படும். அவற்றின் பலனை மக்கள் நேரடியாகக் காண்பார்கள்.
முதலமைச்சர் வைத்துள்ள நம்பிக்கையை 100 சதவீதம் நிறைவேற்றுவேன்” என்றும் தெரிவித்தார்.
ஊழல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
கடந்த ஆட்சிக் காலத்தில்தான் ஊழல் நடைபெற்றது. அதுகுறித்தே திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தனியார் பள்ளிகளின் கட்டண வசூல் கண்காணிக்கப்படும் என்றும், பெரியார் அறிவுலகத்தை விரைவில் திறக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டபோது,
மக்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெற்ற தலைவரின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. வருங்காலங்களிலும் இந்த ஆட்சி தொடரும்.
மக்கள் எங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர் என்றார்.
கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு,
அது குறித்து விசாரித்து, தேவையான மருத்துவர்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது அரசின் கடமை. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ