Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 07 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் நான்காவது நாளாக தடை விதித்துள்ளனர்.
திருக்குறுங்குடி அருகே அமைந்துள்ள திருமலை நம்பி கோவில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நம்பியாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பாதுகாப்பு கருதி கடந்த ஜூன் 4-ம் தேதி முதல் திருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தற்போதும் வெள்ளத்தின் வேகம் குறையாததால், இந்த தடை இன்று நான்காவது நாளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam