சிவகாசியில் நோட்டு புத்தக விலை 10% அதிகரிப்பு - பெற்றோர் அதிர்ச்சி
சிவகாசி, 07 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் நோட்டு புத்தகங்களின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கல்விக்
சிவகாசியில் நோட்டு புத்தக விலை 10% அதிகரிப்பு - பெற்றோர் அதிர்ச்சி


சிவகாசி, 07 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் நோட்டு புத்தகங்களின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கல்விக் கட்டணம், சீருடை, பள்ளிப் பைகள் உள்ளிட்ட செலவுகளால் திணறி வரும் பெற்றோர்களுக்கு, இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

காகிதம் உற்பத்திக்குத் தேவையான கூழ் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக காகிதம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி செலவு சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக காகித உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நோட்டு புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள போதிலும், மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாதாரண 100 பக்க நோட்டு புத்தகம் ரூ.25-ல் இருந்து ரூ.28 ஆகவும், 200 பக்க நோட்டு ரூ.48-ல் இருந்து ரூ.53 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்தமாக வாங்கும் மாணவர்களுக்கு ஒரு செட் நோட்டு புத்தகத்தின் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை கூடுதலாக செலவாகும் நிலை உருவாகியுள்ளது.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறையும் என அஞ்சுகிறோம். விலை உயர்வால் பெற்றோர்கள் குறைந்த அளவிலான நோட்டுகளை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டாலும், தனியார் பள்ளி மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒரு குழந்தைக்கே ஆண்டுக்கு நோட்டு புத்தகத்திற்கு மட்டும் ரூ.2000 வரை செலவாகிறது. இரண்டு, மூன்று குழந்தைகள் உள்ள வீடுகளில் இது பெரும் சுமை என்று கூறினர்.

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, காகித மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு மானியம் வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b