Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 07 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதிக்கு அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையான டாஸ்மாக் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை கடையை நோக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வீசப்பட்ட இரண்டு பெட்ரோல் குண்டுகளும் கடையின் இரும்பு கதவில் பட்டு, கடைக்கு வெளியேயே வெடித்து தீப்பற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடையின் உள்ளே குண்டுகள் விழாததால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்தபோது கடை மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய நபர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b