Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)
நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தியுள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமையல் எரிவாயு மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவினம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக பொதுமக்கள் மீது கூடுதல் சுமை சுமத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், குறிப்பாக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்தடை பொதுமக்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட காரணங்களால் மின்விநியோகம் நிறுத்தப்பட வேண்டியிருந்தாலும், அதுகுறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதை மின்வாரியம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க ஜூன் 11-ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள முதல்வர் விஜய், அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, கேஸ் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ