சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
சேலம், 07 ஜூன் (ஹி.ச.) சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு


சேலம், 07 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்த பின்னர், பணியாளர்கள் உள்ளே இருப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை கடை நோக்கி அடுத்தடுத்து வீசியதாக கூறப்படுகிறது.

இதில் சில குண்டுகள் கடையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோதி வெடித்ததால் தீப்பொறிகள் சிதறின. மேலும் அருகில் இருந்த மற்றொரு கடையையும் குறிவைத்து குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த சில மது பாட்டில்கள் தீப்பற்றி சேதமடைந்தன.

சம்பவத்திற்குப் பிறகு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முகத்தை துணியால் மறைத்தபடி வந்த அவர்கள், தொடர்ச்சியாக குண்டுகளை வீசும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார், குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P