ஆழியார் - நவமலை சாலையில் ஒற்றைக் காட்டு யானை உலா - இருசக்கர வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிப்பு
கோவை 07 ஜூன் (ஹி.ச) கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார்-நவமலை சாலைப் பகுதியில் ‘குட்டி கொம்பன்’ என்று அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கவியருவி பகுதிக்கு அருகே இந்த யானை தொடர்ந்து
ஆழியார் - நவமலை சாலையில் ஒற்றைக் காட்டு யானை உலா - இருசக்கர வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிப்பு


கோவை 07 ஜூன் (ஹி.ச)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார்-நவமலை சாலைப் பகுதியில் ‘குட்டி கொம்பன்’ என்று அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கவியருவி பகுதிக்கு அருகே இந்த யானை தொடர்ந்து சுற்றித் திரிந்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆழியார் அணைக்கட்டு பகுதியில் இருந்து நவமலைக்கு செல்லும் மலைப்பாதை, வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ‘குட்டி கொம்பன்’ யானை தொடர்ந்து சாலையோரத்தில் நிற்பதால், விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஆழியார்-நவமலை சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில், வனத்துறையினரின் கண்காணிப்புடன் அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் நிறுத்தி புகைப்படம் எடுப்பது, யானைக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் ‘குட்டி கொம்பன்’ யானையின் நகர்வை கண்காணித்து வருகிறது.

யானை வனப்பகுதிக்குள் முழுமையாக சென்ற பின்னரே இருசக்கர வாகனங்களுக்கான தடை நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வனத்துறையின் அறிவுறுத்தலுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b