Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 07 ஜூன் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோவில் கடலில் புனித நீராடிய பின்னர் நாழிக்கிணற்றில் தீர்த்தமாடுவதற்காக பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், முடி காணிக்கை செலுத்தும் இடத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. முடி காணிக்கைக்கான டிக்கெட் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam