Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 07 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். கல்லூரியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்லூரியில் தொடங்கிய பிரச்சினை கிராமத்திலும் தொடர்ந்ததாகவும், அதனையடுத்து நள்ளிரவு வெள்ளாளங்குளம் பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அரிவாள் வெட்டு சம்பவமாக மாறியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், மோதலில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவத்தால் கிராமத்தில் பதற்றம் நிலவியதால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க வெள்ளாளங்குளம் கிராமம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்தின் முக்கிய பகுதிகள், பேருந்து நிறுத்தம், பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், இருதரப்பினரிடையேயும் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN