Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 07 ஜூன் (ஹி.ச)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த மகபூப் பாஷாவின் மகன் பாதுஷா (24) என்பவர், அப்பகுதியில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நள்ளிரவு திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் பாதுஷா இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
திடீர் தாக்குதலில் பலத்த காயமடைந்த பாதுஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், உயிரிழந்த பாதுஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
கொலை நடைபெற்ற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கொலை நடந்த இடத்தில் இருந்து பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN