Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக ஆளும் திமுக அரசையும், திமுக கட்சியையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, திரு.வி.க நகர் தொகுதியைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவிக்கு திமுக வழக்கறிஞரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சரவணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், சென்னை மின்வெட்டு விவகாரம் குறித்து பல்லவி வெளியிட்ட கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், எந்தவித ஆதாரமும் இன்றி திமுக மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் கூறப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பும் வகையிலும், திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் அந்த கருத்துகள் அமைந்துள்ளதாக நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தனது குற்றச்சாட்டுகளை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மன்னிப்பு கோரத் தவறினால், அவதூறு மற்றும் நற்பெயர் சேதம் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்றும், அதனால் ஏற்படும் அனைத்து சட்டரீதியான விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வக்கீல் நோட்டீஸ் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தவெக எம்.எல்.ஏ பல்லவி தரப்பில் என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ