Enter your Email Address to subscribe to our newsletters

கூடலூர், 07 ஜூன் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேசரம்பாடி கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நேற்று முதல் முகாமிட்டுள்ளன.
தோட்டங்களையும், வீடுகளையும் ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகள் தொடர்ந்து நடமாடுவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
காலை முதல் இரவு வரை யானைகள் அங்கேயே சுற்றித் திரிவதாகவும், மா மரங்களை முறித்து சேதப்படுத்துவதாகவும் உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக காய்ப்பில் இருந்த மா மரங்கள் பலவும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வருமான இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
யானைகள் ஊருக்குள் நுழைந்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், யானைகள் தொடர்ந்து அதே பகுதியில் சுற்றுவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியோரை தனியாக வெளியே அனுப்ப முடியாத சூழல் நிலவுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்திருக்கலாம். கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, யானைகளை பாதுகாப்பாக வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனியாக யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம். இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
கூடலூர் வட்டாரத்தில் அடிக்கடி நிகழும் மனித-விலங்கு மோதல் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகியுள்ளது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நிரந்தர வனக்குழு அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b