திருவண்ணாமலை கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் சிக்கி குழந்தைகள் அவதி
திருவண்ணாமலை, 07 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், பக்தர்களின் வருகை குறையாமல் இருந்தது
திருவண்ணாமலை


திருவண்ணாமலை, 07 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், பக்தர்களின் வருகை குறையாமல் இருந்தது.

கோவிலின் வட ஒத்தவாடை தெரு ராஜகோபுரம் அருகே நள்ளிரவு முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிலர் வரிசையிலேயே படுத்து உறங்கிய காட்சிகளும் காணப்பட்டன.

அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டவுடன் இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் வேகமாக முன்னேற முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

கூட்ட நெரிசலுக்கு மத்தியில் தாகத்தால் தவித்த சிறுமி ஒருவருக்கு அவரது தந்தை தண்ணீர் வழங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. பலரும் தண்ணீர் அருந்தி சற்று ஆசுவாசம் அடைந்தனர்.

பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்ற நிலை மாறி, தற்போது தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மற்றும் சாமி தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்கு வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், அதிகளவில் பக்தர்கள் கூடும் பகுதிகளில் போதிய அளவு காவல்துறை பாதுகாப்பு இல்லாதது குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P