Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 13.30 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.2,100 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள 4 வழி உயர்மட்டப் பாலத் திட்டத்திற்காக கேஎன்ஆர் கான்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்களை வரவேற்பதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மக்களின் வரிப்பணத்தில் ரூ.700 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாள் முதலே அதை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னணியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் கூட்டுச் சதி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
உயர்மட்டப் பாலத் திட்டத்தை ரூ.1,400 கோடியில் நிறைவேற்றித் தருவதாக மற்றொரு நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்த போதிலும், அதனை நிராகரித்து அதிக தொகை குறிப்பிட்டிருந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அன்புமணி குற்றம்சாட்டினார்.
மேலும், வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்டச் சாலையை மதுரவாயலுடன் இணைக்கும் 6 வழி உயர்மட்டப் பாலத் திட்டத்தின் கிலோமீட்டர் செலவுடன் ஒப்பிடும்போது, திருவான்மியூர்–உத்தண்டி 4 வழி உயர்மட்டப் பாலத்திற்கான செலவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்டப் பாலத் திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.1,400 கோடி மட்டுமே செலவாகும் நிலையில், ரூ.2,100 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என விமர்சித்த அன்புமணி, ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்ததாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ