Enter your Email Address to subscribe to our newsletters

மாஸ்கோ , 08 ஜூன் (ஜி.ச.)
ஆந்திரப் பிரதேசத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் நாரா லோகேஷ், மாஸ்கோவில் ரஷ்யாவின் முன்னணி ரேர் எர்த் கனிம ஆராய்ச்சி நிறுவனமான ‘கிரெட்மெட்’ (Giredmet) அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் கிடைக்கும் கனிம வளங்களை பயன்படுத்தி ரேர் எர்த் தாதுக்கள் சுத்திகரிப்பு மற்றும் ஆழமான கனிம செயலாக்க மையத்தை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை மின்சாரத் துறைகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நெல்லூரில் நியோடிமியம் காந்தங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒத்துழைப்பையும் அமைச்சர் லோகேஷ் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் உள்ள கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்டு ரேர் எர்த் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கும், நெல்லூரில் நியோடிமியம் காந்த உற்பத்தி மையத்தை உருவாக்குவதற்கும் ரஷ்ய நிறுவனத்தின் பங்களிப்பை கேட்டுள்ளோம் என்றார்.
முன்னதாக, மாஸ்கோவில் உள்ள அணுசக்தி அருங்காட்சியகத்தையும் அமைச்சர் லோகேஷ் பார்வையிட்டார்.
அறிவியல், வரலாறு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கும் அந்த அருங்காட்சியகத்தின் அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA