தலைமைச் செயலகத்தில் தனது நாற்காலியை மாற்றிய முதல்வர் விஜய்!
சென்னை, 08 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் உள்ள தமது அலுவலக அறையில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற வசதியாக, அவர் முன்பு பயன்படுத்தி வந்த மரத்தாலான நாற்காலி அகற்றப்பட்டு, அவருக்கு வசதியாக உயர்தர லெதர் இருக்கை வைக்
CM Joseph Vijay


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் உள்ள தமது அலுவலக அறையில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற வசதியாக, அவர் முன்பு பயன்படுத்தி வந்த மரத்தாலான நாற்காலி அகற்றப்பட்டு, அவருக்கு வசதியாக உயர்தர லெதர் இருக்கை வைக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வலிமையான திமுக, அதிமுக கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய், கடந்த மாதம் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு தலைமைச் செயலகம் வந்த அவர் முதலமைச்சரின் இருக்கையில் அமர்ந்தார். அப்போது பாரம்பரிய நடைமுறைப்படி இருக்கையில் வெள்ளை நிறத் துண்டு போடப்பட்டிருந்தது. மறுநாளே அந்த துண்டை முதலமைச்சர் விஜய் அகற்றிவிட்டார்.

அதன் பிறகு முதலமைச்சர் அந்த இருக்கையில் அமர்ந்து பணியாற்றி வந்தார். தினமும் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் முதலமைச்சர் விஜய், ஆய்வுக் கூட்டங்கள், விருந்தினர்களைச் சந்தித்தல், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள், கோப்புகளைப் பார்வையிடுதல் என மாலை 4.30 மணி வரை தனது இருக்கையில் அமர்ந்தே பணியாற்றி வருகிறார்.

எனவே, முதல்வர் விஜய் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற வசதியாக இருக்கும் வகையில், பழைய மரத்தாலான நாற்காலியை அகற்றிவிட்டு, அவரது உடல்வாகிற்கு ஏற்ற புதிய உயர்தர விலையுயர்ந்த இருக்கை முதல்வரின் அறையில் இன்று வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மணிக்குமார் மற்றும் செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய பிரத்யேக இருக்கையும் அதில் இடம்பெற்றுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN