Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற மதிப்புமிக்க நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டினார்.
இந்தச் சந்திப்பின் போது, நார்வே செஸ் தொடரில் முதல் இந்தியராக சாம்பியன் பட்டம் வென்றதற்காக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
உலக செஸ் அரங்கில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவின் சாதனையை முதலமைச்சர் வெகுவாகப் பாராட்டியதுடன், வருங்கால போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியின் சிறப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இடையே குறுகிய நேர செஸ் ஆட்டமும் நடைபெற்றது.
இந்த நிகழ்வு அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும் செஸ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிகழ்வில் தமிழக அரசின் உயரதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரக்ஞானந்தாவின் சாதனையை அரசு தொடர்ந்து கௌரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P