Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 08 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிறப்பு அதிரடிப் படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதிகளில் உள்ள உள்கிராமங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலை முதல் வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் அதிரடிப்படையினர் குழுக்களாக பிரிந்து மலைக்கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
சந்தேகத்திற்குரிய இடங்கள், நீரோடைகள் மற்றும் மலை இடுக்குகளில் கள்ளச்சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடப்பட்டது.
கள்ளச்சாராய உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி வனப்பகுதிகளிலும் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதிரடிப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வனப்பகுதிகளை கள்ளச்சாராய கும்பல்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் வகையில் தொடர் சோதனைகள் நடத்தப்படும் எனவும், பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b