மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் -  பின்னணி குறித்து தீவிர விசாரணை
சென்னை, 08 ஜூன் (ஹி.ச.) சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட வழக்கு, மேலதிக விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட உள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பண
Eb


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட வழக்கு, மேலதிக விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட உள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கணினிகளில் இருந்து ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், கடந்த மே 18ஆம் தேதி அலுவலகத்தில் இருந்து 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கணினி பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபிநாத் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், பெங்களூருவைச் சேர்ந்த கடை உரிமையாளர் முரளி மனோகர் என்பவரிடமிருந்து வழக்கில் தொடர்புடைய அனைத்து ஹார்ட் டிஸ்குகளும் மீட்கப்பட்டன.

மேலும், கோபிநாத் முன்பு பணியாற்றிய சில நிறுவனங்களிலிருந்தும் கணினி உதிரிபாகங்களை திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 34 ஹார்ட் டிஸ்குகள் மற்றும் 20 ரேம் (RAM) பாகங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் கோபிநாத் மற்றும் முரளி மனோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரையை ஏற்று, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருட்டுக்குப் பின்னால் வேறு ஏதேனும் சதி அல்லது பின்னணி உள்ளதா, முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள் திட்டமிட்டு குறிவைத்து திருடப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ