Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 08 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் 3-ஆம் தேதி ஃபைபர் படகில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் கடலில் மாயமாகிய நிலையில், ஐந்து நாட்கள் தேடுதலுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் ரமேஷ், மனோகர் மற்றும் நாகவேல் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், மூன்று மீனவர்களும் வழக்கமான மீன்பிடிப் பணிக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட நாளில் கரை திரும்பாததால் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
கடலோரக் காவல் படையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து ரோந்து படகுகள் மூலம் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று காலை கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூவரையும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்து பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
நீண்ட நேரம் கடல் நீரில் இருந்ததாலும், உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்ததாலும் மூவரும் உடல் சோர்வுடன் காணப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாயமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட செய்தி அறிந்து புதுப்பேட்டை மீனவ கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தொடர் தேடுதல் பணியில் ஈடுபட்ட கடலோரக் காவல் படை மற்றும் மீன்வளத்துறையினருக்கு மீனவ சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் கடலில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b