Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 08 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன்களை, காலியாக உள்ள கள உதவியாளர் மற்றும் வயர்மேன் பணியிடங்களில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 9,613 கேங்மேன்கள் தற்போது மின் தடை நீக்குதல், மின்மாற்றி பராமரிப்பு, மின் கணக்கீடு உள்ளிட்ட கள உதவியாளர் மற்றும் வயர்மேன் பணிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிகளின் போது மின்சாரம் தாக்கி 80-க்கும் மேற்பட்ட கேங்மேன்கள் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்வாரியத்தில் 26,605 கள உதவியாளர் மற்றும் 14,358 வயர்மேன் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது பணியாற்றும் கேங்மேன்களை அந்தப் பணிகளில் நியமித்துவிட்டு, மீதமுள்ள இடங்களுக்கு புதிய நியமனங்களை மேற்கொள்ளலாம் என்ற கோரிக்கை நியாயமானது என அவர் கூறியுள்ளார்.
கேங்மேன்கள் தேவையான கல்வித் தகுதி மற்றும் பயிற்சிகளை பெற்றிருப்பதுடன், பலர் உயர்கல்வியும் முடித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களை அடுத்தக்கட்ட பணிகளுக்கு உயர்த்துவது குறித்து நீதிமன்றங்களும் தொழிலாளர் நல அமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன என்றார்.
மேலும், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கேங்மேன்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து 500 கி.மீ. தொலைவில் பணியமர்த்தப்படுவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், அவர்களின் தகுதிக்கேற்ற பணி மற்றும் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam