Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 ஜூன் (ஹி.ச.)
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு நடைபெறுவதாகக் கூறி, அதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வில் இந்த முறையீட்டை முன்வைத்தார்.
முறையீட்டில், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகிய நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியான வழக்கறிஞர்களே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் குறிப்பிட்ட நீதிமன்றங்களுக்கு எந்தெந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும் என பட்டியல் வெளியிடப்பட்டதாகவும், அது சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் அரசியல் தலையீட்டைத் தடுக்கவும், தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், வழக்கை விசாரணைக்காக பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam