Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
சமீபத்தில் நார்வேயில் நடைபெற்ற உலகின் மிக மதிப்புமிக்க செஸ் போட்டிகளில் ஒன்றான நார்வே செஸ் தொடரின் இறுதிச் சுற்றில், உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தி பிரக்யாநந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்த மதிப்புமிக்க தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 19 வயதே ஆன சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரின் இந்த சாதனை, இந்திய செஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தாயகம் திரும்பிய பிரக்யாநந்தா, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது, உலக அரங்கில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்ததற்காக முதலமைச்சர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சந்திப்பின் போது பேசிய முதலமைச்சர்,
பிரக்யாநந்தாவின் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டினார். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாகவும், அவரது அடுத்தடுத்த போட்டிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யாநந்தா,
முதலமைச்சரின் வாழ்த்து தனக்கு மேலும் உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டார். நார்வே தொடரின் வெற்றி தனது கனவு நனவான தருணம் என்றும், வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரக்யாநந்தாவின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளரும் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b