Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஜூன் (ஹி.ச.)
இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் திரிணமூல் காங்கிரஸ் உட்பட 23 கட்சிகள் பங்கேற்கின்றன.
இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மியும் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இண்டியா கூட்டணி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தல்களில் சில முக்கிய கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தன. இந்த பின்னடைவுகள் மற்றும் கூட்டணிக்குள் அதிகரித்து வரும் மனக்கசப்புகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதை 23 கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன என்றார்.
இந்த கூட்டத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார்.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தெரெக் ஓ பிரையன் கூறுகையில்,
ஒரு பொதுவான நோக்கத்துடனும் தெளிவான எண்ணத்துடனும் இந்த சந்திப்பு நடக்கிறது.
இண்டியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. பல கட்சிகளும் தோழமை உணர்வோடு இந்த சந்திப்பை எதிர் நோக்கியுள்ளன என்றார்.
தமிழகத்தில், தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து ஆட்சியிலும் பங்கேற்றதால், அந்த கட்சி தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், டெல்லியில் காங்கிரஸ் பங்கேற்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P