கவின் கொலை வழக்கு - எஸ்ஐ கிருஷ்ணகுமாரி ஜாமின் வழக்கு ஒத்திவைப்பு
நெல்லை, 08 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27). இவர் ஐடி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் கொடூரமாக வெட்டி படுகொலை
Kavin case


நெல்லை, 08 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27). இவர் ஐடி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவரை கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக நெல்லை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் கவினின் காதலியான சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோரை மாநகர போலீசார் கைது செய்தனர். கவின் மற்றும் சுபாஷினி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் தந்தை மற்றும் மகன் இருவரையும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான தடயங்களை மறைக்கவும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்கவும் ஜெயபால் உதவியதாக, போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நெல்லை பிசிஆர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. கைதான இவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கில் சதித்திட்டத்தை முழுமையாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கினர். சுபாஷினி மற்றும் அவரது தாயாரும் பெண் எஸ்ஐயுமான கிருஷ்ணகுமாரி ஆகியோரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே கைதானவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கொலையில் கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுமார் 10 மாதங்களாக போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாய்தாவின் போது நீதிபதி ஹேமா, ஏன் பெண் எஸ்ஐ-யை கைது செய்யவில்லை என சிபிசிஐடி போலீசாரை கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை போலீஸ் டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் சிபிசிஐடி எஸ்ஐக்கள் அடங்கிய தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து ஆஜர் படுத்தப்பட்ட உதவி ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் உள்ள பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் வருகின்ற 12 ஆம் தேதி ஜாமின் வழங்குவது தொடர்பான விசாரணையில், ஜாமின் வழங்க மறுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN