சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் - செங்கல்பட்டில் தலை மீட்பு,மனைவி உள்பட இருவர் கைது
சென்னை, 08 ஜூன் (ஹி.ச) கடந்த ஜூன் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த சூட்கேசை பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் தலை இல்லாத நிலையில் ஆண் ஒருவரின் ச
Male body found in suitcase


சென்னை, 08 ஜூன் (ஹி.ச)

கடந்த ஜூன் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த சூட்கேசை பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அதில் தலை இல்லாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த அமீர் அலி என்பது அடையாளம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அமீர் அலியின் மனைவிக்கும், வேறொரு நபருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் அமீர் அலி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் அமீர் அலியின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் துண்டிக்கப்பட்ட அந்த உடலின் தலை செங்கல்பட்டு அருகே மீட்கப்பட்டுள்ளது என காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த கொடூர சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தற்போது விசாரணை ஓட்டேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன கை மற்றும் கால்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலைக்கான நோக்கம் மற்றும் முழு பின்னணி குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b