3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டாய இடமாற்றம் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு
புதுச்சேரி, 08 ஜூன் (ஹி.ச) புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாநிலத்தில் நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் க
3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டாய இடமாற்றம் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு


புதுச்சேரி, 08 ஜூன் (ஹி.ச)

புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மாநிலத்தில் நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி, புதுச்சேரி அரசுத் துறைகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பதவி உயர்வை விரும்பாமல், ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அரசின் எந்தவொரு கொள்கை முடிவாக இருந்தாலும், அதனை செயல்படுத்துவதற்கு முன்பாக தொடக்க நிலையிலேயே தன்னிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார்.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், முடிவெடுப்பதில் ஒருங்கிணைப்பை கொண்டுவரவும் இந்த நடைமுறை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

நிதி நிர்வாகம் தொடர்பாக பேசிய அவர், அரசின் நிதி விவகாரங்களில் தேவையற்ற செலவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொதுமக்களின் வரிப்பணம் வீணாகாமல், அரசின் ஒவ்வொரு ரூபாயும் மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படும் வகையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் நிர்வாகத்தை மேம்படுத்தவும், ஊழலை தடுக்கவும், பணிகளில் சுணக்கத்தை போக்கவும் இந்த அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b