அமைச்சர் விக்னேஷை சந்திக்க அனுமதி மறுப்பு? -திண்டுக்கல்லில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், 08 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் திண்டுக்கல்லுக்கு வருகை தந்த நிலையில், அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி கட்சி தொண்டர்கள் ஆர
அமைச்சர் விக்னேஷ்


திண்டுக்கல், 08 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் திண்டுக்கல்லுக்கு வருகை தந்த நிலையில், அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் விக்னேஷ் நேற்று இரவு திண்டுக்கல்லுக்கு வருகை தந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நகர மற்றும் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமைச்சரை நேரில் சந்திக்க ஹோட்டலுக்கு வந்தனர்.

அப்போது, கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மா மற்றும் சில நிர்வாகிகள் அமைச்சரை சந்திக்க விடாமல் தடுத்ததாகவும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தொண்டர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அமைச்சரை பார்க்க வந்த தொண்டர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஹோட்டல் வளாகத்திலேயே தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

“மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும்”, “தொண்டர்களை அவமதித்த நிர்வாகிகளை நீக்க வேண்டும்” என முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

மேலும், அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து தொண்டர்கள் அங்கிருந்தே காத்திருந்தனர்.

இந்த சம்பவத்தால் திண்டுக்கல் நகரில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam