Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
வீட்டு உபயோக எரிகாற்று உருளையின் விலையை ரூ.29 உயர்த்தியுள்ள இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னறிவிப்பின்றி எரிகாற்று உருளை விலையை உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் மனச்சான்றற்ற செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று உருளை விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய அதிகாரம் தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதே தற்போதைய விலை உயர்வுகளுக்கான அடிப்படைக் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு குறைக்கப்பட்ட சமையல் எரிகாற்று உருளை விலையை மீண்டும் ரூ.1,000 அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இது நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் நடவடிக்கை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
எனவே, எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில், எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ