தென்மேற்கு பருவமழை - நீலகிரியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
நீலகிரி, 08 ஜூன் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதிகளாக இருந்த நிலையில் இந்திய புவியியல் துறை கடந்த ஒரு வருட காலமாக செய்த ஆய்விற்கு பிறகு, தற்போது 160 அபாயகரமான பகுதிகளாக குறைந்து உள்ளது என மாவட்ட ஆட்சித்
Nilgiri


நீலகிரி, 08 ஜூன் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதிகளாக இருந்த நிலையில் இந்திய புவியியல் துறை கடந்த ஒரு வருட காலமாக செய்த ஆய்விற்கு பிறகு, தற்போது 160 அபாயகரமான பகுதிகளாக குறைந்து உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதனை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மழை பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி அளித்தார்.

குறிப்பாக முதலமைச்சர் தலைமையிலான பருவமழை குறித்த கூட்டம் நடைபெற்ற போது, பாதிப்பிற்குரிய மாவட்டமாக நீலகிரியும் உள்ளதால் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் மழை பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் தயார் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் அபாயகரமாக கண்டறியப்பட்டு இருந்த நிலையில் இந்திய புவியியல் துறை ஆய்விற்கு பிறகு தற்போது 160 ஆக குறைந்து உள்ளது. அதனால் அந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் மணல் மூட்டைகள், ஜேசிபிகள் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையினர் சீரமைப்புகளை சரி செய்வார்கள்.

குறிப்பாக 29 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் செயல்படும். அதில் வருவாய்த் துறையுடன் மின்வாரியம், காவல்துறையினர், தீயணைப்புத்துறை 24 மணி நேரமும் இருப்பார்கள்.

இது மட்டுமின்றி அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புகளை தெரிவிக்கும் வகையில் அதிகாரிகள் பணியில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மழையால் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மழைநீர் கால்வாய்கள் மட்டுமின்றி கல்வெட்டுகளும் சீரமைக்கப்பட்டு உள்ளன.

இது மட்டுமின்றி 20 பொக்லைன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக 1077 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் லட்சிமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN