Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 08 ஜூன் (ஹி.ச.)
அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 8 கல் குவாரிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக அம்மாவட்டம் முழுவதும் தீவிர கள ஆய்வு மற்றும் அளவீட்டுப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின்போது, அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி கற்கள் வெட்டியெடுப்பு, உரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமை, சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
ஆய்வறிக்கையின் அடிப்படையில், விதிகளை மீறியதாக உறுதி செய்யப்பட்ட 8 குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்து, அவற்றின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
மூடப்பட்ட குவாரிகளில் இனி கனிம வளங்களை வெட்டியெடுப்பது, ஏற்றிச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள பிற குவாரிகளிலும் தொடர் கண்காணிப்பு நடத்தப்படும் எனவும், விதிமீறல் கண்டறியப்பட்டால் இதேபோன்ற நடவடிக்கை தொடரும் எனவும் சுரங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b