குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - சேலத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
சேலம், 08 ஜூன் (ஹி.ச) சேலம் மாவட்டம், கருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - சேலத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்ததால் போக்குவரத்து பாதிப்பு


சேலம், 08 ஜூன் (ஹி.ச)

சேலம் மாவட்டம், கருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள், சேலம் மார்க்கமாக சென்ற அரசு பேருந்தை வழிமறித்து சிறைபிடித்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாட்டால் தாங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தால் சேலம்-கருப்பூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி உமாசங்கர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிநீர் பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் நிரந்தர தீர்வு காணப்படும் எனவும், தேவைப்பட்டால் லாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அதிகாரியின் உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

இருப்பினும், அளித்த வாக்குறுதியை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b