குவாரிகள் மூடல் எதிரொலி - எம்-சாண்ட், ஜல்லி விலை கடும் உயர்வு
திருநெல்வேலி, 08 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ள நிலையில், தற்போது 65 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கனிம வளத்துறை மற்றும் தமிழக அரசின் கட்டுப்பாடுகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குவாரிகள்
குவாரி


திருநெல்வேலி, 08 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ள நிலையில், தற்போது 65 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

கனிம வளத்துறை மற்றும் தமிழக அரசின் கட்டுப்பாடுகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குவாரிகள் மூடப்பட்டுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் உள்ளிட்ட கட்டுமான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

முன்னதாக டன் ஒன்றுக்கு ரூ.600-க்கு விற்பனையான 3/4 அங்குல ஜல்லி, ரூ.150 உயர்ந்து தற்போது ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்-சாண்ட் டன் ஒன்றுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.800 வரை விற்கப்படுகிறது.

பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பி-சாண்ட் விலையும் உயர்ந்து டன் ஒன்றுக்கு ரூ.900 ஆக உள்ளது.

மேலும், கட்டுமான மூலப்பொருட்களின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.600 வரையும், ஒரு லோடுக்கு ரூ.2,000 வரையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடீர் விலை உயர்வால் வீடு கட்ட திட்டமிட்டுள்ள பொதுமக்களும், கட்டுமானத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரும் கவலையடைந்துள்ளனர்.

கட்டுமானச் செலவு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam