Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 2025 முதல் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத் தொகையையும் ரவி மோகன் வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் ஆர்த்தி ரவி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால ஜீவனாம்சம் கோரும் மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குடும்ப நல நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த அந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி ரவி மோகன் புதிய மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்த்தி ரவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க முடியாது எனத் தெரிவித்து, ரவி மோகனின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், தேவையான நிவாரணத்திற்காக குடும்ப நல நீதிமன்றத்தையே அணுகுமாறு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ