தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சவுக்கு சங்கர் புகார் -காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை, 08 ஜூன் (ஹி.ச.) யூடியூப்பர் சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தா
Savukku


சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)

யூடியூப்பர் சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக உள்ள அருண், தன்னை கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளதாக தகவல் கிடைத்ததாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். டெல்லியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரிலும் தன்னை கொலை செய்யும் முயற்சி நடந்ததாகவும், அப்போது செல்வநாத ரத்தினம் மற்றும் வருண்குமார் ஆகியோர் மூலம் கூலிப்படை நியமிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததால் அப்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்-யிடம் புகார் அளித்திருந்ததாக தெரிவித்தார்.

அதேபோல், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய சவுக்கு சங்கர், இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளின் பங்கு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள், அதிகாரிகள் நியமனம் மற்றும் சில ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சவுக்கு சங்கர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டவை மட்டுமே. அவை தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதில் வெளியாகவில்லை.

காவல்துறை புகார் மனுவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்குப் பின்னரே உண்மை நிலை தெரியவரும்.

Hindusthan Samachar / P YUVARAJ