திருவாரூர் மாவட்டத்தில் மின்னழுத்த பிரச்சனை- பயிர்கள் பாதிக்கும் அபாயம் என விவசாயிகள் வேதனை
திருவாரூர், 08 ஜூன் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தில் மின்னழுத்த குறைபாடு நிலவி வருவதால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைவதால் கூடுதல் செலவை சந்திக்க வேண்டியுள்ளதா
மின்


திருவாரூர், 08 ஜூன் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தில் மின்னழுத்த குறைபாடு நிலவி வருவதால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைவதால் கூடுதல் செலவை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், ஆழ்குழாய் கிணறுகளை நம்பி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முன்பட்ட குருவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கோடை பருத்தி சாகுபடி 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், கோடை நெல் சாகுபடி மற்றொரு 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தற்போது முக்கிய வளர்ச்சி மற்றும் அறுவடை கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த சூழலில், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்னழுத்த பிரச்சனை நீடித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படாததால், இரண்டு ஷிப்டுகளாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வழங்கப்படும் மின்சாரத்தின் மின்னழுத்தம் போதுமானதாக இல்லாததால் ஆழ்குழாய் கிணறு மோட்டார்கள் முழுத் திறனில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வயல்களுக்கு தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் வாடும் நிலை உருவாகியுள்ளதாகவும், மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைந்து விவசாயிகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்ட நிலையில், மின்னழுத்த பிரச்சனையை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P