Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 08 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் வெண்கல பாறை பீட் வனப்பகுதியில் கடந்த 1990 மற்றும் 1995- ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் வைடூரிய கற்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
கடத்தலில் ஈடுபட்ட கேரள கும்பல், வனப்பகுதி வழியாகவே ஊடுருவி வைடூரியக் கற்களை வெட்டி கடத்திச் சென்றனர். கடத்தலில் ஈடுபட்ட சிலரை வனத்துறையினர், தொடர்ந்து கைது செய்து வந்துள்ளனர். மேலும் கடத்தல் கும்பலுக்கும், வனத்துறையினருக்கும் இடையே இரண்டு முறை துப்பாக்கிசூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
களக்காடு மலையில் கிடைப்பது முதலில் வைரம் எனக் கூறப்பட்டது. ஆனால் அது அரிய வகையைச் சேர்ந்த வைடூரிய கற்கள் என்று அப்போதைய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த 2023- ஆம் ஆண்டு கூட களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை, நடுத்தெருவை சேர்ந்த முன்னாள் கிராம வனக்குழு தலைவரான சாமுவேல் மகன் சுசில்குமார் (வயது 57) கீழப்பத்தையைச் சேர்ந்த நடராஜன் மகன் வேல்முருகன் (வயது 42) ஆகியோரிடம் இருந்து சுமார் ரூபாய் 8 கோடி மதிப்பிலான அரை கிலோ வைடூரியக் கல்லை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மலைப்பகுதி அருகே சமீபகாலமாக குழிகள் தோண்டப்பட்டன. இதனால் மீண்டும் மர்ம நபர்களால் களக்காடு மலைப்பகுதியில் வைரங்கள் வெட்டி கடத்துவதற்காக குழிகள் தோண்டப்படுகிறதா? என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர்.
ஆனால் வனத்துறையினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அளித்துள்ள விளக்கத்தில், சம்பந்தப்பட்ட இடத்தில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இதற்காக உரிய அனுமதி பெறாதால் வருவாய்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர். மற்றபடி, 1990 கால கட்டங்களில் கடத்தல் நடைபெற்ற இடத்திற்கும் தற்போது குழி தோண்டப்பட்ட இடத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
இருப்பினும், கடந்த காலங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் வரை சென்ற நிலையில் மீண்டும் அதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன் வனத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு இதனைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN