காலை உணவில் பல்லி விழுந்ததாக பரபரப்பு- 11 மாணவர்கள் வாந்தி, மயக்கம்
திருவண்ணாமலை, 08 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 11 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங
உணவில் பல்லி


திருவண்ணாமலை, 08 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 11 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே 11 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உணவை ஆய்வு செய்தபோது, அதில் பல்லி விழுந்திருந்தது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்த ஜெகன் தனது காரில் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவலறிந்து அங்கு சென்ற டி.எஸ். வேலு, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

அரசுப் பள்ளி காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் சம்பவத்தால் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam