Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வெளியேறியுள்ளதால் அதனை அடிப்படையாகக் கொண்டு அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சிலர் தங்களிடம் தெரிவித்த பின்னரே கூட்டம் நடத்தி முடிவெடுத்ததாகவும், அவர்களில் சிலர் அக்கட்சியில் இணைந்துள்ள நிலையில், சிலர் இன்னும் திமுகவுடனேயே இருப்பதாகவும் கூறினார்.
அந்தந்த அரசியல் கட்சிகள் எடுக்கும் முடிவுகளை விமர்சிக்கக் கூடாது என்றும், அது அவர்களின் உரிமை என்றும் திமுக தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பல கட்சிகள் மதசார்பற்ற கூட்டணியில் இருந்து விலகியிருப்பதால் சண்முகம் அவ்வாறு கருத்து தெரிவித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
பாஜகவுக்கு எதிரான மதசார்பற்ற கூட்டணி நிச்சயமாக வலிமையான கூட்டணியாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்த டி.கே.எஸ். இளங்கோவன், தேர்தல் வெற்றி அல்லது தோல்வி எதுவும் திமுகவை பாதிக்காது என்றார்.
75 ஆண்டுகால வரலாற்றில் திமுக பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளதாகவும், கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கமாக திமுக தொடர்ந்து தனது பயணத்தை முன்னெடுக்கும் என்றும் கூறினார்.
வெற்றி பெற்றால் தங்களது கொள்கைகளை ஆட்சியில் செயல்படுத்துவோம்.
வெற்றி பெறாவிட்டால் ஆட்சியில் இருப்பவர்களை அந்தக் கொள்கைகளை செயல்படுத்த வலியுறுத்தி போராடுவோம் என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ