Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதால், மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாக இருப்பதால், வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் குறுவை சாகுபடி நீர் இந்த ஆண்டு திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு உரிய நேரத்தில் நீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியே கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததும், கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதும் இந்த நிலைக்கு காரணம் எனக் கூறியுள்ள தினகரன், இதனால் விவசாயிகளுடன் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்குவதோடு, குறுவை சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பையும் அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியான மின்தடை காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாநிலத்தின் பல பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கான கொள்முதல் தொகை நிலுவையில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கர்நாடக அரசிடம் தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்றும், மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யச் செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam