Enter your Email Address to subscribe to our newsletters

தாம்பரம், 08 ஜூன் (ஹி.ச.)
சென்னை தாம்பரம் மேம்பாலம் அருகே பெண்ணை கிண்டல் செய்ததாக எழுந்த தகராறில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே சிலர் மது அருந்திய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக கணவன்-மனைவி இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது போதையில் இருந்த இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கணவர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் சிலர் தாக்கப்பட்டதாகவும், சம்பவத்தின் காட்சிகள் வீடியோவாக பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மதுபானக் கடைகள் சுற்றுவட்டாரங்களில் பொது இடங்களில் மது அருந்துவோரால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P